குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
சேத்துப்பட்டு தாலுகா, கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று நடைபெறும். குழந்தை இல்லாத பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டு கோவிலில் வழங்கும் பிரசாதத்தை முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டியவாறு மண்சோறு சாப்பிடுவர்.
கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மகான் ஆறுமுக சுவாமி ஜீவசமாதி அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் பொதுமக்கள் கோயில் கட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் குருபூஜை விழா நடத்தி வருகின்றனர்.
அதன்படி இவ்வருட ஆடி அமாவாசை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மகான் ஆறுமுக சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது
நேற்று 188 ம் ஆண்டு பரதேசி ஆறுமுக சுவாமிக்கு குருபூஜை மற்றும் ஆடி அமாவாசை அன்னதான விழா நடந்தது. காலை அனைத்து கோயில்களுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனை மற்றும் கோ பூஜை நடந்தது. பின்னர் விபூதி வள்ளல் தனபால் சுவாமிகளின் அடியார்களது பஜனை ஊர்வலம் நடைபெற்றது
கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கேசவ சர்மா குழுவினரால் மகா சிறப்பு யாகம் நடந்தது. இதில் குழந்தை வரம் வேண்டிய பெண்கள் மற்றும் கோட்டுபாக்கம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி பக்தர்கள் முக்கிய விதிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ஆறுமுக சாமியை வழிபட்டனர்.
குழந்தை வரம் கேட்டு வழிபட வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு அமர வைக்கப்பட்டனர். அதில் பெரிய மேடை அமைத்து பல்வேறு யாகங்கள் நடைபெற்றது
பகல் 12 மணிக்கு குழந்தை வரம் வேண்டிய பெண்களுக்கு பிரசாதம் வழங்கும் விழா தொடங்கியது. குழந்தை வரம் வேண்டிய பெண்கள் கோயில் அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு பிரசாதம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையல் போட்டு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது. பின்னர் படையல் போட்ட பிரசாதத்தை கோயில் நிர்வாகத்தினர் எடுத்து வந்து கோயில் அருகே நீண்ட வரிசையில் அமர்ந்த பரதேசி அடியார்கள் மூலம் குழந்தை வரம் வேண்டிய பெண்களுக்கு வழங்கப்பட்டது.
அதனை முந்தானையில் வாங்கிய பெண்கள் கோவில் முன்பு உள்ள குளத்தில் படிக்கட்டில் முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு குனிந்து சாப்பிட்டனர். வள்ளி, தெய்வானை முருகனுக்கு அலங்காரம் செய்து வைத்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குழந்தை பெற்ற தாய்மார்கள் எடைக்கு எடை காசுகளை வைத்து துலாபாரத்தில் காணிக்கை, செலுத்தினார்கள். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோட்டுபாக்கம் பரதேசி மகான் ஆறுமுகசாமி விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu