வந்தவாசி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள் அந்தப் பெண்ணின் கணவர் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கோகிலா (வயது 22) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண்குழந்தை உள்ளது. கோகிலா செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வந்தார். சக்திவேலுக்கும் கோகிலாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய கோகிலாவிடம் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
கோகிலா குடும்பத்தினருக்கு சக்திவேல் குடும்பத்தினர் காலை தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோகிலா குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கோகிலாவின் சடலம் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது.
தனது மகள் கோகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் சுதா அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற கீழ்கொடுங்கலூர் போலீசார் கோகிலாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழ்கொடுங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் கோகிலா இருந்ததால் இது குறித்து கோட்டாட்சியர் விஜயராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கோகிலாவின் உறவினர்கள் கூறுகையில், வரதட்சனை கொடுமையால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த உறவினர்கள் கோகிலாவின் சடலத்தை வாங்க மறுத்தனர். மேலும் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர் . உரிய நடவடிக்கை எடுப்பதாக வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu