கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு: வாகனம் முன் பாய்ந்த திமுக வேட்பாளரின் மனைவி
வாகனத்தின் முன்னே படுத்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மகேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி.
வந்தவாசி நகர மன்ற தேர்தலில் 22வது வார்டை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் ஏமாற்றமடைந்த திமுக வேட்பாளர் மனைவி வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்ததால் அப்பகுதியில் ஒரே பதட்டம் ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்ற தேர்தலில் 22வது வார்டில் திமுக வேட்பாளர் மகேந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில் திடீரென 22வது வார்டை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மகேந்திரனை வாபஸ் பெறும்படி திமுக வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்து மகேந்திரன் அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து எம்எல்ஏ அம்பேத்குமாரிடம் முறையிட்டுள்ளனர்.
பின்னர் அவருடன் நடத்த பேச்சுவார்த்தை உடன்பாடு எப்படாததால் கட்சி கூறியபடி வாபஸ் பெறுங்கள் என எம்எல்ஏ கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய வேட்பாளர் மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தவாசி – ஆரணி சாலையில் சாலை மறியல் செய்தனர். அப்போது வேட்பாளர் மகேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி அவ்வழியாக வந்த வாகனத்தின் முன்னே படுத்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் எம்எல்ஏ அம்பேத்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 22வது வார்டு திமுகவிற்கு ஒதுக்கவில்லை என்றால் பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என திமுகவினர் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதால், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என திமுக வேட்பாளர் சமாதானம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu