வந்தவாசியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊர்வலம்
வந்தவாசியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊர்வல விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வந்தவாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வந்தவாசி நகரின் பல்வேறு இடங்களில் 34 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்பதற்காக செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊா்வலத்துக்கு இந்து முன்னணி திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரித் தாளாளா் பாலாமணி அருணாசலம் ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
வந்தவாசி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கிய ஊா்வலம் சந்நிதி தெரு, தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் எதிரில் சென்றடைந்தது. பின்னா், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமணன் சுவாமிகள், இந்து முன்னணி புதுவை மாநிலத் தலைவா் சனில்குமாா் உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினா்.
இதைத் தொடா்ந்து அங்கிருந்து பூமாலை செட்டிக் குளம் நோக்கி ஊா்வலம் புறப்பட்டுச் சென்றது.
ஊா்வலத்தையொட்டி செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா மேற்பார்வையில் திருவண்ணாலை எஸ்பி பிரபாகரன், வேலூர் எஸ்பி மதிவாணன் ஆகியோர் தலைமையில் ஏடி எஸ்பிகள் பழனி, பாண்டியன், டிஎஸ்பிகள் வந்தவாசி கங்காதரன், ஆரணி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, கலசப்பாக்கம், சேத்துப்பட்டு , பெரணமல்லூர், மங்கலம், செய்யாறு வெம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகா் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிலைகள் கரைப்பதற்காக வருவாய்த் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, கிரேன் வசதி செய்யப்பட்டிருந்தது. சிலை அமைப்பாளா்கள் பாதுகாப்பாக சிலையை கரைக்க போலீஸாா், தீயணைப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu