வந்தவாசி அருகே போலீஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்

வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் நேற்று முன்தினம் வந்தவாசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். மருதாடு பஸ் நிறுத்த பகுதியில் சென்றபோது எதிரே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருண்குமாரை, பிரபு தாக்கி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். இந்நிலையில் பிரபு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் பிரபுவை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த வந்தவாசி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக், சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu