முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ. 1.34 லட்சம் திருடிய இளைஞர் கைது.. போலி ஏடிஎம் கார்டு பயன்படுத்தியது அம்பலம்..
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள நல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர், வந்தவாசியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்றார். பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, ஏழுமலையிடம் இருந்து ஏடிஎம் கார்டை பெற்ற அந்த இளைஞர் 10 ஆயிரம் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுத்து ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். பின்னர், ஏழுமலையிடம் அவரது ஏடிஎம் கார்டை வழங்குவதற்கு பதிலாக தான் ஏற்கெனவே தயாரக வைத்திருந்த ஒரு போலி ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார்.
பின்னர், ஏழுமலையில் வங்கி இருப்பில் பணம் அதிகளவு இருப்பதை தெரிந்து கொண்ட அந்த இளைஞர் ஏழுமலையிடம் இருந்து பெற்ற ஏடிஎம் கார்டு மூலம் பல்வேறு இடங்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இந்த விவரம் ஏழுமலைக்கு தாமதமாகவே தெரியவந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஏழுமலை இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த நிலையில், வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் சன்னதி தெரு வழியாக ரோந்து சென்ற போது, அங்கு தனியார் வங்கி ஏடிஎம் முன்பு நின்றிருந்த ஒரு இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட தோகைமலை நெசவாளர் தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் காட்ஜான் (21) என்பது தெரியவந்தது.
மேலும், ஏழுமலையின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக போலி ஏடிஎம் கார்டு கொடுத்ததும், ஏழுமலை ஏடிஎம் கார்டு மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் திருடியதும் காட்ஜான் என்பது தெரியவந்தது. இதையெடுத்து காட்ஜானை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 86 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 5 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu