வந்தவாசியில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: முதல்வர் திறப்பு
புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், நகர மக்களின் தேவைக்காக துவக்கப்பட்ட நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாடகை கட்டிடங்களில் சில ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 75 இலட்சம் மதிப்பீட்டில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம், தேசிய நகர்ப்புற நலதிட்டத்தின் கீழ்கட்டப்பட்டது. இதை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன் பாட்டுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய மாவட்ட ஆ ட் சி த் தலைவர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு அரசு மருத்துவத் துறைக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. துவக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் போதுமான நிதி இல்லாததால் சிலவேலைகள் தடைபட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்காக, மாவட்ட ஆட்சிய ர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த குறைகள் சரி செய்யப்படும் என்று கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது தொடக்க உரையில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றற்ற கழக ஆட்சி அமையும் போதெல்லாம் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனடிப்படையிலேயே வந்தவாசி அரசு மருத்துவமனையில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்கு முடிவடையும். நகர்ப்புற மக்கள்பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்ட இந்த நகர்ப்புற சுகாதார மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தனது சிறப்புரையில், திமுக அரசு அமையும் போதெல்லாம் வந்தவாசி தொகுதி வளம் பெறுகிறது. இந்த பகுதி காடு போல இருந்த பகுதி, இந்த பகுதியில் சீனிவாசன் தலைவராக இருந்த போது, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து இந்த பகுதி சாலையோரங்களில் வசித்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் 148 வீடுகள் அடங்கிய தொகுப்பு வீடு அமைக்கப்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ அம்பேத்குமார் பேசியதை தொடர்ந்து 10 கோடி செலவில் ஸ்கேன், டயாலிசிஸ் வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைய உள்ளது. ஆரணியில் செய்யாறில் உள்ளது போல் வந்தவாசியில் அறிவுசார் மையம் அமைய மாவட்ட ஆட்சியரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் , செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா , வட்டாட்சியர் பொன்னுசாமி, நகரமன்ற தலைவர் ஜலால், நகர திமுக செயலாளர் தயாளன், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன்,நகர்மன்ற துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான், கிஷோர் குமார், ஒன்றிய குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார கல்வி அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் , மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu