வந்தவாசி அருகே ஓட்டலில் செல்போன் திருடிய இருவரை பிடித்த பொதுமக்கள்

வந்தவாசி அருகே ஓட்டலில் செல்போன் திருடிய இருவரை பிடித்த பொதுமக்கள்
X
ஓட்டலில் கும்பலாக வந்து செல்போன் திருடிவிட்டு தப்பிய 2 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமம் பைபாஸ் ரோட்டில் சீனிவாசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் செல்போன்களுக்கு கடையில் சார்ஜ் போட்டு விட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

திடீரென அந்த செல்போன்கள் காணாமல் போனதால் ஓட்டலில் வேலை செய்யும் நபர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் ஓட்டலுக்கு வெளியே வந்தபோது 8 நபர்கள் மோட்டார்சைக்கிள்களில் ஓட்டலுக்கு வந்து விட்டு ஒரே நேரத்தில் திரும்பிச்சென்றதை பார்த்தார்.

அவர்களை சீனிவாசன் சத்தம்போட்டு அழைத்தும் நிற்காமல் சென்றனர். உடனே அங்கிருந்த பொதுமக்களுடன் விரட்டிச் சென்று 2 நபர்களை மடக்கிப் பிடித்தார். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்

தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடித்து வைத்த 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உடைய ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குமரன் , அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் குருபிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் உள்பட 8 பேர் 4 மோட்டார்சைக்கிள்களில் வந்ததாகவும் இவர்கள் செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஆற்காடு, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருப்பவர்களிடம் நகைகளை பறிப்பதும், ஓட்டல்களில் சார்ஜ் போட்டு இருக்கும் செல்போன்களை திருடுவதும், சாலையில் நின்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் 2 நபர்களை கைது செய்து இவர்களிடமிருந்து 13 செல்போன்களையும் திருடுவதற்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!