ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது: ரூ.48.50 லட்சம், 82 பவுன் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.48.50 லட்சம் ரொக்கம் மற்றும் 82 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை இவர்களிடம் இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டிநாயுடு தெருவைச் சோ்ந்தவா் அருண் (எ) அருணாசலம், இவா், சட்டவிரோதமாக இணையவழியில் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பேரில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. (திருவண்ணாமலை பொறுப்பு) ஷ்ரயோ குப்தா தலைமையிலான போலீஸாா் அருண் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில், அருணாச்சலம் கணினி மூலம் ஆன்லைன் சூதாட்டம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டம் நடத்த அவர் பயன்படுத்திய லேப்டாப், 6 செல்போன்கள், ரூ.48.50 லட்சம் ரொக்கம், 82 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை எஸ்பி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அருணாச்சலத்திடம் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் சையத் இப்ராஹிம் என்பவருடன் சேர்ந்து இந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் கோகுலபுரத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சையத் இப்ராகிமையும் கைது செய்தனர்.
கைதான சையத் இப்ராகிம் போலியோ தாக்கியதில் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி ஆவார். அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார், கைதேர்ந்த அவரை அருணாச்சலம் வேலைக்கு அமர்த்தி இதில் ஈடுபட வைத்திருக்கிறார். அதன்படி சையத் இப்ராகிம் செங்கல்பட்டில் இருந்தபடியே அருணுடன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாராம்.
அருணாச்சலம் மற்றும் சையத் இப்ராமிக் ஆகியோரிடம் ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது,. அருணாச்சலம் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் இவ்வாறு சூதாட்டத்தில் பிறரிடம் ஏமாற்றி பறித்ததா இல்லையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu