ஏரியில் மண் அள்ளிய லாரி: பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்த பொதுமக்கள்

ஏரியில் மண் அள்ளிய லாரி: பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்த பொதுமக்கள்
X

மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் திடீரென சிறைபிடித்தனர்.

வந்தவாசி அருகே ஏரியில் மண் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ராமதாஸ் தெருவையொட்டிய ஏரி பகுதியில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மண் அள்ளி கொண்டிருந்தனர். அதை, அந்தப் பகுதி பொதுமக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் திடீரென சிறைபிடித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வருவாய்த்துறையினரிடம் முறையான அனுமதி இல்லாமல் எங்கள் கிராம ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுகின்றனர். மண் அள்ளுவதைத் தட்டிக்கேட்டால் சென்னாவரத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்காக மண் எடுக்கிறோம், எனக் கூறுகிறார்கள். மண் எடுத்தால் மழைக் காலத்தில் எங்களின் குடியிருப்பு பாதிக்கப்படும். எனவே மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்துள்ளோம் என்றார்.

தகவல் அறிந்து ஏரிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தம், பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றார். அதற்கு பொதுமக்கள், திருட்டுத்தனமாக மண் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரத்தை கிராம நிர்வாக அலுவலரான நீங்கள் தானே பறிமுதல் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு எங்களை ஏன் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறீர்கள்? எனப் பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், பொதுமக்களை சமரசம் செய்தார். முறையாக காவல்துறையினரிடம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்போம் என்று கூறி பொதுமக்களை சமரசம் செய்தனர். இதையடுத்து சிறை பிடித்த லாரி, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் விடுவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!