சப் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் கல்லூரி முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் பிடித்து விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டி தாக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், செய்யாறு தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஓசூரான் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள், சப்-இன்ஸ்பெக்டரை தாக்க பயன்படுத்திய கத்தி, அவருடைய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
உண்டியலை உடைத்து பணத்தை மூட்டை கட்டியபோது பிடிபட்ட திருடன்
தானிப்பாடி அருகே 4 ஆண்டுக்கு முன் திருடிய அதேஅம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மூட்டைகட்டி கொண்டிருந்த கொள்ளையனை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடியை அடுத்த நாவக்கொல்லை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் கோவிலில் யாரோ பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. அந்த பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது ஒரு மர்ம ஆசாமி கோவிலின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து அழைத்து வந்தார்.
அதற்குள் அந்தநபர் கோவிலுக்குள் சென்று அம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தங்க தாலியை திருடியதோடு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை மூட்டைக்கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த பொதுமக்கள் அந்தநபரை கையும் களவுமாக மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டு கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கிராமத்தை சேர்ந்த சுந்தரவேல் என்பதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாளிகள் 3 பேருடன் இதே கோவிலுக்கு வந்து 110 கிலோ எடையுள்ள வெண்கல அம்மன் சிலை மற்றும் 2 கிலோ வெள்ளி கிரீடம், உண்டியல் பணத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த கொள்ளையனை போலீசார் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu