ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த க்ரைம் செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நஸ்ருதீன் தலைமையிலான போலீசார் நகரில் இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே 2 மினி வேன்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். இதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 15 டன் ரேஷன் அரிசியையும், அதைக் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட 2 மினி வேன்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கிலோ எடை உள்ள 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பாலீஷ் போட்டு பெங்களூருவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் கோதுமையையும் கடத்தி வந்து மாவாக அரைத்து கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை மேலாளர் சங்கர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பரசுராம் , அழகுபாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி பாலு உடையார் தெருவை சேர்ந்த வர் வாசு மூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே பைக்கை நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் காலை எழுந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் திருவள்ளுர் மாவட்டம் நெடுங்கல் கிராமம் சந்திரசேகர் புரத் தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போளூர் அடுத்த மங்களா மேடு கூட்ரோடு செங்குனம் கிராமத்தை சேர்ந்தவர் முபினுதீன் . இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரவு வேலூர் நோக்கி பைக்கில் தம்பதி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முபினுதீன் டீக்கடையில் பைக்கை நிறுத்தி டீ குடித்தனர். அப்போது முபினுதீனுக்கும் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முபினுதீன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த தர்மலிங்கம் நாடக ஆசிரியர் தகராறு செய்தவரை விலக்கி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முபினுதீன் தர்மலிங்கத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தர்மலிங்கத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu