வந்தவாசி திருநீலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

வந்தவாசி திருநீலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்
X

திருநீலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் ஸ்ரீசெளந்தரிநாயகி உடனுறை திருநீலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெளந்தரிநாயகி உடனுறை திருநீலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலின் தேர் சேதமடைந்ததால் அதன்பின்னா் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு ஒதுக்கிய ரூ.30 லட்சம் நிதியுடன், பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து புதிய மரத்தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த தேரினை பக்தா்கள் பக்தி வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேரில் ஸ்ரீசெளந்தரிநாயகி உடனுறை திருநீலகண்டேஸ்வரா் பவனி வந்தாா்.

கோயில் அருகில் இருந்து புறப்பட்ட தேர் கிராம முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான புதன்கிழமை ஸ்ரீசத்புத்ரி நாயகிக்கும், ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், சுவாமி திருக்கல்யாணம் முடிந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பூஜை

பள்ளிப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது பொது தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

இதில் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு பிளஸ் 1 பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து வகுப்பு மாணவ மாணவிகள் பங்கேற்று வழிபட்டனர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் ஸ்கேல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா