திருவண்ணாமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு

திருவண்ணாமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு
X
திருவண்ணாமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் , விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி உத்தராம்பாள் இருவரும் காலையில் விவசாய பணிக்காக சென்றனர்.

பின்னர் பகல் 12 மணியளவில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ கதவு திறந்திருந்தது. அதிலிருந்த 11 பவுன் நகைகள், 5 வெள்ளி கொலுசுகள், ரூ.60 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. திருட்டுப் போன நகை, வெள்ளி பொருட்கள் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும். திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீசல் மோசடி

வந்தவாசி அருகே காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று இரவு மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகர், அந்த காருக்கு டீசலை நிரப்பினார். டீசல் நிரப்பி முடிந்ததும் பணம் கேட்டபோது, காரில் வந்தவர்கள் பேடிஎம்மில் பணம் செலுத்துவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன் பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காரின் பதிவெண் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare