வந்தவாசி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு
பைல் படம்
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் மின் ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, மாம்பட்டு துணை மின் நிலையத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்ய பிரியா,
இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், ஏழுமலை வீடு மீச நல்லூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே தனியாக உள்ளது. சத்யபிரியா வந்தவாசியில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் தினந்தோறும் பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், காலை 9 மணி அளவில் ஏழுமலை மாம்பட்டு மின் நிலையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
சத்யபிரியா காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு வந்தவாசியில் உள்ள தட்டச்சு பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு மீண்டும் 11.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நான்கரை சவரன் தங்க நகை, ரூபாய் 2500 ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக சத்யபிரியா ஏழுமலைக்கு தகவல் கொடுத்தார். ஏழுமலை விரைந்து வந்து பார்த்த பின்னர் தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேகாமதி, குற்றப்பிரிவு ஏட்டுகள் முருகன், அயாத், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அருகே பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில் தெள்ளார் பகுதியில் இருந்து வந்த நபர் திருடிவிட்டு மீண்டும் தெள்ளார் நோக்கி பைக்கில் செல்வது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வடிவுக்கரசி. மகன் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து ரமேஷ் வீட்டினுள் கொள்ளையடிக்க புகுந்தனர்.
வீட்டில் சத்தம் கேட்ட வேல்முருகன் எழுந்து பார்த்தார். அப்போது பீரோவின் அருகே மர்ம கும்பல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கும்பலை மடக்கி பிடிக்க வேல்முருகன் முயன்றார். மர்ம கும்பல் கட்டையால் வேல்முருகனின் தலையில் அடித்தனர்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அவரையும் மர்மகும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றனர்.
இதில் ரங்கநாதனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த வேல்முருகன் மற்றும் ரங்கநாதனை அருகே இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கி விட்டு தப்பி சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu