மண் சாலையை சீரமைக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

சாலையை சீரமைக்கக் கோரி, அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சினேகிதன் அறக்கட்டளை நிர்வாகி ஆரோக்கியதாஸ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்காக அதே வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக மண் பாதையும் அமைக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த மண் சாலை குண்டும் குழியுமாக மாறியது.
இதனால் மாற்றுத் திறனாளிகளாகிய எங்களுக்கு 3 சக்கர வாகனங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மண்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சில தினங்களுக்கு முன் அந்த மண்பாதையில் சென்ற மாற்றுத் திறனாளிகள் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது, அந்தக் கட்டடத்தில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்தள வசதி உள்ளது என்றும் பதில் கூறி தட்டிக் கழிக்கின்றனா்.
ஆனால் அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, தற்காலிக மண் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி) ஸ்ரீதா் உறுதி அளித்ததை அடுத்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu