கணவரின் ஊதியத்திலிருந்து பகுதி பணம் பெற்றுத்தரக்கோரி மனைவி திடீர் தர்ணா

கணவரின் ஊதியத்திலிருந்து பகுதி பணம் பெற்றுத்தரக்கோரி மனைவி திடீர் தர்ணா
X

தெள்ளார் ஒன்றிய அலுவலக முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.

தெள்ளாரில் கணவரின் ஊதியத்தில் இருந்து பகுதி பணம் பெற்றுத்தரக் கோரி மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ெதள்ளார் ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் ஞானசேகரன்.

இவரின் மனைவி கீதா (வயது 41). அவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கீதா கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் தனியாக வசித்து வருகிறார்.

கீதா தனது மகளுடன் வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது கீதா கூறுகையில், தெள்ளார் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் எனது கணவர் ஞானசேகரன் எங்களின் குடும்ப செலவுகளுக்கோ, மகள்களின் படிப்பு செலவுக்கோ பணம் தருவதில்லை. பணம் கேட்டாலும் அவர் தர மறுக்கிறார். இதனால் நாங்கள் அன்றாட செலவுக்கே தவித்து வருகிறோம். எனவே கணவரின் ஊதியத்தில் இருந்து பகுதி பணம் பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டோம் என அவர் கூறினார்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.ராஜன்பாபு, ஸ்ரீதர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கீதாவும், மகளும் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!