வந்தவாசியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
X
வந்தவாசியில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

தற்போது, சம்பா போக நெல் விளைந்து அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே வாடகை வாகனங்கள் மூலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொண்டு வந்து எடை போட்டு விலை பட்டியலை பார்த்துவிட்டு போகலாம் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்று முன்தினம் நிர்ணயித்த விலையை விட இன்று ரூ.600 குறைவாக இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடை போட மூட்டைக்கு ரூ.10 கேட்பதாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு வாங்கினால் வண்டி கூலி, அறுவடை கூலி, உரம் விலை ஆகியவற்றை கணக்கிட்டால் எங்களுக்கு உழைப்பு தான் வீணாகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி