தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட மகளிர் குழுவினர்
அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் குழுவினர்
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஓசூா், நெல்லியாங்குளம், மூடூா், அமுடூா், துணையம்பட்டு, கீழ்செம்பேடு உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த 230 மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளன.
இதில், மகரஜோதி, ஒளிவிளக்கு, செம்பருத்தி, சங்கமம் உள்ளிட்ட 18 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ கடன், நேரடிக் கடன் வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே உரிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் கடன் வழங்காமல் மகளிர் சுய உதவிக் குழுவினரை கூட்டுறவு சங்க அலுவலர்கள் அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 18 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடா்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடன் வழங்காததைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ் கொடுங்கலூர் காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மகளிர் குழுவினரிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இது குறித்து செய்யாறு துணை பதிவாளர் இடம் பேசி ஒரு வாரத்தில் அனைவருக்கும் கடன் உதவி வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து மகளிர் குழுவினர் கூறுகையில், இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருப்பவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வரும் இவர், மகளிர் குழுவினர்களுக்கு கடனுதவி வழங்காமல் உள்ளார். எனவே ஓசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு நிரந்தர செயலாளர் உடனடியாக நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu