மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி

மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
X

காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த பெண்கள்

வந்தவாசி அருகே மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து நூதன மோசடி நடைபெற்றுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கித் தருவதாக கூறி பெண்களிடம் ரூபாய் 21 ஆயிரம் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாம்.

துண்டு பிரசுரத்தில் திருச்சியை மையமாக கொண்டு விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனம் ரூபாய் 1.20 லட்சம் வரை மகளிர் சுய உதவி குழு கடன் தருவதாகவும், தொடர்பு கொள்ள சுரேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்ணுடன் அந்த துண்டு பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்ததாம்.

இதனை அடுத்து வீரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் துண்டு பிரசுரத்தில் இருந்த கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மகளிர் சுய உதவிக் குழு கடன் பற்றியும் தங்களுக்கு தருமாறும் கேட்டுள்ளனர்.

எதிர் முனையில் பேசியவர்கள் கடன் தேவைப்படுவோரின் ஆதார் அட்டை குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பும்படி கூறியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பி அந்த கிராமத்தை சேர்ந்த 13 பெண்கள் தங்களது ஆவணங்களை வாட்ஸ் அப் மூலம் அந்த நபர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

இதை அடுத்து இந்த கிராமத்தை சேர்ந்த பெண்களை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் கடன் வழங்க வேண்டும் என்றால் அதற்குரிய காப்பீட்டுத் தொகையை முன்னதாகவே செலுத்த வேண்டும் என்று கூறி அம்பிகா என்ற பெயரிலான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் ஒன்றை இந்த கிராமத்து பெண்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பிய 13 பெண்களும் சேர்ந்து மொத்தமாக ரூபாய் 21,000 அந்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடன் வழங்க கோரி அவர்கள் இருவரையும் கிராமத்து பெண்கள் கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் இருவரும் அழைப்பை துண்டித்துள்ளனர்.

தொடர்ந்து முயன்றும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் தங்கள் பணத்தை மீட்டு தர கோரி வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் பலமுறை இவ்வாறு வரும் விளம்பரங்களை நம்பாதீர்கள் என எடுத்துக் கூறியும் , பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் அவர்களது விளம்பரங்கள் குறித்தும், பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!