வந்தவாசி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்
கீழ்கொடுங்காலூரில் நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பிரசாதன சாலையில் உள்ள கடைக்காரர்கள் முன்பகுதி இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையிலிருந்து கீழ்நர்மா வரையிலான சுமார் 5 கி.மீ. தூர தார்ச்சாலையை ரூ.6.80 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையிலிருந்து கீழ்க்கொடுங்காலூர் திருவள்ளுவர் நகர் வரை இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கால்வாயை ஒட்டிய சாலையோரம் கட்டியுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆர்.தியாகராஜன், உதவிப் பொறியாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குளத்தை மீட்க கோரிக்கை
வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடை வெயில் காலத்தில் கால்நடைகள் குடிப்பதற்கு இந்த குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் இருந்த இந்த குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டையாக மாறியது. இதனால் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றன.
குளம் திடீரென காணாமல் போவதற்குள்ளாக மீட்டு எடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடமும், கிராம ஊராட்சி மன்றத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டெடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu