ஆரணி அருகே புதையுண்ட சோழ கால சிவன் கோயில் மீட்பு: எம்பி ஆய்வு

ஆரணி அருகே புதையுண்ட சோழ கால சிவன் கோயில் மீட்பு: எம்பி ஆய்வு
X

சோழ கால சிவன் கோயிலில் ஆய்வு  மேற்கொண்ட ஆரணி எம்பி

ஆரணி அருகே மீட்கப்பட்ட புதையுண்ட சோழ கால சிவன் கோயிலை எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள அயலவாடி கிராமத்தில் புதையுண்ட சிவன் கோவில் மீட்கப்பட்ட இடத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம் ,பெரணமல்லூர் ஒன்றியம், வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகில் ஆயிலவாடி கிராமம் உள்ளது. இவ்வூர் ஏரிக்கரை சரிவில் மண்ணில் புதைந்த நிலையில் கோவில் கண்டறியப்பட்டது. புதையுண்ட கோயில் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இக்கோயில் குறித்து வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வகுமாரின் ஆய்வு தகவல்கள் பரவலாக பேசப்பட்டது..

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இவ்வூர் இளைஞர்கள், பொதுமக்கள் உதவியுடன் சேலம் பகுதி உழவாரப்பணி குழுவினரால் கோயிலின் உட்பிரகாரம், கோயில் சுற்றுப்புறமும் சுத்தம் செய்து முதல் பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் அண்மையில் தன்னாா்வலா்கள் எழுச்சியில், தஞ்சை பகுதி தன்னாா்வலா் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து, இளைஞா்கள், பொதுமக்கள் உதவியுடன் ஏரிக்கரை மண்ணை முழுவதுமாக அகற்றி கோயில் முழுவதும் தெரியும் வகையில் மீட்புப் பணி மேற்கொண்டனா்.

இதனைத் தொடர்ந்து செய்யாறு கோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் , திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த சுதர்சன் உள்ளிட்ட அதிகாரிகள், சென்னை தொல்லியல் துறையிலிருந்து ரமேஷ் மற்றும் செஞ்சி தொல்லியல் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். ஆய்வு சார்ந்து தங்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் நேரில் வந்து மீட்கப்பட்ட கோயிலை பார்வையிட்டார். பின்னர் அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி புனரமைப்புக்கான பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், தொல்லியல் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai powered agriculture