வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

 தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட சான்றிதழ் வாங்க வேண்டுமென்றால் நல்லூர் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வந்தனர். கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பல போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும், எனப் பொதுமக்கள் கூறினர். கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி ஊர் மக்கள் துணைத் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!