சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதை இல்லாமல் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வந்தனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில் நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தைக்கு பிறகு மற்றவர்கள் தங்களது நிலத்தில் பாதை அமைக்க இடம் கொடுத்த நிலையில் ஒருவர் மட்டும் கொடுக்காமல் இருந்தாக கூறப்படுகின்றது.

அதேப் பகுதியை சேர்ந்த ஒருவர் சுடுகாட்டுக்கு செல்லும் வழி எங்கள் இடத்தின் வழியாக செல்கிறது. எனவே இறந்தவர் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் அந்த நபரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தனிநபர் உடன்படாததால் பாதை அமைப்பதில் சிக்கல் இருந்து வந்தன.

இந்த நிலையில் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக தமிழக அரசு சார்பில் சுடுகாட்டு பாதை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த தனி நபர் சென்னை கோர்ட்டில் எங்கள் இடத்தின் மீது மயான பாதை அமைக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்ததால் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

இதை அறிந்த கொட்டை கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கீழ்கொடுங்காலூர் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் ராஜேந்திரன், வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாட்டு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business