தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை சமரசம் செய்யும் போலீசார்
வந்தவாசி ஒன்றியம் சலுகை ஊராட்சிக்கு உட்பட்ட தாழம் பள்ளம் கிராமத்தில் கடந்த 2018- 2019 ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சிலருக்கு மண்புழு உரத் தொட்டி கட்டும் பணி ஒதுக்கப்பட்டது.
இதற்கான 5 நாள் கூலியாக இவர்களுக்கு தலா ரூபாய் 1,180 முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால் மண்புழு உரத் தொட்டி கட்டப்படவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து முன்னதாகவே வழங்கப்பட்ட கூலி தொகையை திரும்ப வழங்கும்படி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அந்தத் தொகையை திரும்ப செலுத்தாததால் அவர்களுக்கு திட்ட வேலை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூலியை திரும்ப வழங்கும்படி கூறியதை கண்டித்தும் தொடர்ந்து வேலை வழங்கக்கோரி கிராம கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சி அலுவலர் குப்புசாமி, வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்டோர் அவர்களை சமரசம் செய்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu