ஆரணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
X

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது.

ஆரணி அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் முத்தாலம்மன் கோவில் திடல் அருகாமையில் விநாயகர் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் கிராம பொதுமக்களும், இளைஞர்களும் இணைந்து புதிதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலை கட்டியுள்ளனர்.

அந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் 2 யாக மேடை, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 கலசங்களில் புனித நீர் நிரப்பி ஹரி சிவாச்சாரியார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க 3 கால யாக பூஜைகளை நடத்தினர். பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை நாதஸ்வர வாத்தியங்களுடன் கோவிலை வலம் வந்து கருவறை கோபுரத்திலும், சுப்பிரமணிய சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கு சற்று முன்பாக வானில் 4 கருடங்கள் வட்டமிட்டு பறந்தன. அப்போது அரோகரா என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பொதுமக்கள், பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அன்னதானமும் வழங்கப்பட்டது .

சேத்துப்பட்டு

ஜெகநாதபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சேத்துப்பட்டு தாலுகா ஜெகநாதபுரம் கிராமத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி கோவிலக்கு பஞ்சவர்ணம் பூசி 2 குதிரை சிலை அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலுக்கு முன்பு பந்தல் அமைத்து யாக குண்டம் ஏற்படுத்தப்பட்டது. அதில் புண்ணியநதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை 108 கலசங்களில் வைத்து இஞ்சிமேடு சிவன் கோவில் சிவாச்சாரியார் ஆனந்தன் தலைமையில் பல்வேறு மூலிகை கொண்டு யாகம் நடத்தப்பட்டது .

பின்னர் மாரியம்மன் கோவில் விமானத்தில் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தியதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மேல்மருவத்தூர்,ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், எதிரொலி மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேவிகாபுரம் பாலமுருகன் கோவிலில் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலில் 8-ம் ஆண்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீர் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் பாலமுருகனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதனையடுத்து மலைக்கு அருகே உள்ள கரட்டான் குளத்தில் தெப்பல் அமைத்து, அதில் பாலமுருகனை வைத்து 3 முறை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷமிட்டனர். நேர்த்தி கடனாக வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி குளத்தில் உள்ள தண்ணீரில் விட்டு வணங்கினார்கள். மேலும் பக்தி சொற்பொழிவு நடந்தது. அதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!