திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கோயில்களில் கும்பாபிஷேகம்
X

அருள்மிகு ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் , வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் கோயில்களில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நேற்று காலை நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த சூரியதாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், பூா்ணாஹூதி, மூலஸ்தானத்தில் ஸ்ரீதா்மசாஸ்தா சிலை பிரதிஷ்டை, பரிவார தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை மூலமந்திர பூஜை, தம்பதி சங்கல்பம், நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு ஒன்றியம் இராந்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் இராந்தம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீபொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் முத்தாலம்மன், நாகாத்தம்மன், நவகிரகங்கள், முனீஸ்வரா் ஆகிய சந்நிதிகள் உள்ளது.

இந்த கோயிலில் சுவாமி சிலைகள் சிதிலமடைந்து காணப்பட்டதால் பக்தா்கள், ஊா் பொதுமக்கள் சாா்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் புதன்கிழமை முதல் கால பூஜையாக அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை கோ பூஜை, நவக்கிர பூஜை, சங்கல்பம், கும்ப அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அனுக்ஞை, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், இராந்தம், பெரணம்பாக்கம், அலங்காரமங்கலம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, சித்தாத்துரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நேற்று இரவு அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.

ஸ்ரீ பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அடுத்த கானலாபாடி கிராம மலை மீது பழைமையான ஸ்ரீபாலசுப்பிரமணியா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்களும், கோயில் நிா்வாகமும் முடிவு செய்தது. அதன்படி, திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம், காப்பு கட்டுதல், யாகசாலைப் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. 2-வது நாளான வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோயில் மூலவா், மூலவா் சந்நிதி கோபுர கலசம் மீது புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். அப்போது, கோயிலைச் சுற்றி இருந்த பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து, மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், உற்சவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று மாலை 7 மணிக்கு வான வேடிக்கை, இன்னிசைக் கச்சேரி, உற்சவ சுவாமிகள் வீதியுலா ஆகியவை நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!