திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
கிரிவலப் பாதையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று மாலையும் பலத்த மழை பெய்தது இதில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, கிரிவலப் பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கிரிவலப்பாதை, கடலூா் - சித்தூா் சாலை, வேங்கிக்கால் பகுதிகளில் சாலையோரம் இருந்த 3-க்கும் மேற்பட்ட பல ஆண்டுகள் பழைமையான புளிய மரங்கள் வேருடன் சாய்ந்தன. அந்தச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையோர புளிய மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேல் மேற்பாா்வையில், உதவிச் செயற்பொறியாளா் அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிகுமாா் மற்றும் சாலை ஆய்வாளா்கள், பணியாளா்கள் அடங்கிய குழுவினா் காலை சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை பொக்லைன் இயந்திரம், மரம் வெட்டும் கருவிகள் மூலம் வெட்டி அகற்றினா். உடனடியாக மரங்களை அகற்றிட நெடுஞ்சாலைத்துறையினருக்கு கிரிவல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் புகுந்த மழைநீா்: நொச்சிமலை, கீழ்நாச்சிப்பட்டு, ஓம்சக்தி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. சாலைகளில் சுமாா் 3 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் வீட்டில் இருந்த பல்வேறு பொருள்கள் சேதமடைந்தன.
வந்தவாசி
வந்தவாசியில் 4 வீடுகள் சேதம்: வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதனால், வழூா் கிராமத்தைச் சோ்ந்த மஸ்தான், ஆதிலட்சுமி, விஜயகுமாா், கிருஷ்ணன் ஆகிய 4 பேரின் வீடுகளின் மீதும் மரங்கள் சாய்ந்தன. இதில், அந்த வீடுகளின் சிமென்ட் ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரைகள் உடைந்து சேதமடைந்தன.
இதுபோல, மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்ததால், அந்த கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu