திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று இரவு நடைபெற்ற திருவீதி உலா.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது . திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், செய்து துளசி மாலை படை மாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் சின்ன கடை தெரு, அய்யங்குளம் தெரு, ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
செங்கம் நகரில் உள்ள வீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் மூலவருக்கு அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு வீரசுந்தரஆஞ்சநேயர் மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி கவரை தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த இரும்பேடு ஹரிஹகரன் நகரில் உள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 5-ம் ஆண்டாக லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. இதனையொட்டி கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன, தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 இளநீரினால் அபிஷேகமும் நடத்தப்பட்டு, 50 ஆயிரத்து 8 வடமாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
போளூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும், இளநீரினால் அபிஷேகமும் நடத்தப்பட்டு, ஆயிரத்து 8 வடமாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஏற்பாடுகளை தீயணைப்புத் துறையினர் செய்திருந்தனர். அரிமா சங்கத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu