வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் வீசப்பட்ட மாணவன் சாவு

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் வீசப்பட்ட மாணவன் சாவு
X

மின்சாரம் தாக்கி இறந்த பள்ளி மாணவன்  ஸ்ரீகாந்த்.

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் வீசப்பட்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமம் பங்களாமேட்டு தெருவைச் சேர்ந்த சிவக்குமாரின் மகன் ஸ்ரீகாந்த் (வயது 15). இவர், மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்ரீகாந்த்தும் அதே கிராமத்தைச் சேர்ந்த குமாரின் மகன் சந்தோசும் அங்குள்ள ஒருவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்றனர்.

அந்த விவசாய கிணற்றில் இருந்து மற்றொரு விவசாயி தனது நிலத்துக்கு மின்மோட்டார் மூலம் நீர் உறிஞ்சி பயிருக்கு பாய்ச்சி கொண்டிருந்தார்.

விவசாய கிணற்றில் மீன் பிடித்த ஸ்ரீகாந்த் மின்வயரை தாண்டி செல்ல முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து ஸ்ரீகாந்த் அருகில் உள்ள விவசாய கிணற்றில் தூக்கி வீசப்பட்டார்.

உடன் சென்ற சந்தோஷ், ஸ்ரீகாந்தை காப்பாற்ற முயன்று விவசாய கிணற்றில் குதித்தார். அப்போது அவரையும் நீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கியது. அதில் சந்தோஷ் கரையேறி உயிர் தப்பி கூச்சலிட்டார்.

அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மின் மோட்டாரை நிறுத்தி கிணற்றில் இருந்து ஸ்ரீகாந்த்தை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஸ்ரீகாந்த் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, கீழ்கொடுங்கலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!