சுடுகாட்டு காட்சிக்காக சுடுகாட்டுக்கே சென்று நடித்த நாடக நடிகருக்கு தீக்காயம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் புது காலனியைச் சேர்ந்த திருமலை மகன் அருண்குமார் . நாடக நடிகரான இவர் தனது குழுவினருடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று வரலாற்று நாடகங்களில் நடித்து வருகிறார்.
இவர், சக நாடக நடிகர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் சிவகங்கை திருமணம் என்ற நாடகத்தில் பார்வதி வேடமிட்டு அருண்குமார் நடித்து வருகிறார்.
அப்போது சுடுகாட்டு சாம்பலை உடலில் பூசி நடிக்கும் காட்சிக்காக நள்ளிரவு கிராம மக்கள் சுமார் 30 பேருடன் அந்த கிராம சுடுகாட்டுக்கு சக நடிகர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு பிணம் எரிக்கப்பட்ட சாம்பலை பூசிய அவர் அங்கிருந்து ஓடி வருவதுபோன்று அருண்குமார் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு நாடக நடிகர் கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு சாகசம் செய்வதற்காக வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பந்தத்தை நோக்கி ஊதினார்.
அப்போது வாயிலிருந்து தீ வானத்தில் பறப்பது போல் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக எதிரே இருந்த அருண்குமார் மீது தீ பற்றியது. இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அருண்குமார் அலறி துடிதுடித்தார்.
அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நாடக நிறுவன உரிமையாளரான செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த கப்பிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் தெள்ளார் காவல்துறையில் புகார் அளித்தார். அது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்எண்ணெயை வாயில் ஊற்றி தீ்ப்பந்தத்தை வைத்து சாகசம் செய்யக்கூடாது என ஏற்கனவே தடை உள்ளது. தடையை மீறி விபரீத சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தின் போதுதான் அதுவும் நாடகம் நடித்துக்கொண்டிருந்த நாடக நடிகரே தீக்காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu