ஆற்காடு நவாப் அன்வர்திகான் கால நல்லிணக்க கல்வெட்டு கண்டுபிடிப்பு
வந்தவாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட ஆற்காடு நவாப் அன்வர்திகான் கால நல்லிணக்க கல்வெட்டு.
வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பிரகாஷ், பாலமுருகன், பழனிச்சாமி, சேது ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள குளக்கரை அருகில் தெலுங்கு மொழி கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர்.
அந்த கல்வெட்டு சுமார் 4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டது. கற்பலகையின் முன்புறம் 19 வரியிலும் பின்புறம் 11 வரியிலும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை படித்த இந்திய தொல்லியல் துறை சென்னை பிரிவின் கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு கல்வெட்டு விளக்கத்தை வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு அனுப்பினார்.
இது குறித்து ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், இந்த கல்வெட்டு 1749-ல் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டில் ஸ்ரீராம நமஹ என்று வழிபாட்டு சொல்லுடன் தொடங்கி இப்பகுதியில் 2 இடங்களில் குளம் வெட்டிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு குளம் வந்தவாசி சீர்மையைச் சேர்ந்த கஸ்பா இளங்காடு என்ற இடத்திலும் அதாவது இக்கல்வெட்டு உள்ள ஊரிலும், மற்றொரு குளம் பாராமகாஹானம் என்ற இடத்திலும் வெட்டியுள்ளனர்.
இந்த குளத்தை மகாராஜா லாலா தூனிச்சந்த் என்பவரின் மகன் லாலா முகம்மது காசிம் என்பவர் வெட்டியுள்ளார். இந்த கஸ்பா இளங்காடு என்பது ஹஸ்ரத் முகமது அலிகான் சாகேப் மற்றும் ஹஸ்ரத் நவாப் அன்வர்திகான் ஆட்சிப்பிரிவான சபாவில் ஒரு கிராமமாக இருந்துள்ளது.
இக்குளம் நல்ல தண்ணீர் குளம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இன்னும் இந்த குளத்து தண்ணீரைத் பயன்படுத்தி வருகின்றனர்.
இக்கல்வெட்டில் குறிப்பிடும் அன்வர்திகான் ஆற்காட்டை ஆட்சிபுரிந்த முதல் நவாப் ஆவார். இவரே முதல் மற்றும் 2-ம் கர்நாடக போரில் ஆங்கிலேயர் பக்கம் நின்று பிரெஞ்சுப் படைகளை எதிர்த்தவர்.
தொடர்ந்து நடைபெற்ற போர்களில் 1749-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன்பின் அவரது மகன் முகமது அலிகான் ஆற்காடு நவாப் ஆனார்.
இந்த கல்வெட்டு மூலம் 18-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த ஆற்காடு நவாப் அன்வர்திகான் கால மக்களின் நல்லிணக்கத்தை காட்டுவது சிறப்பானதாகும்.
எனவே இக்கல்வெட்டை ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu