நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில், நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அஞ்சல் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைபொதுச்செயலாளர் செல்வன், வந்தவாசி சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர் நுண் நிதி நிறுவன அராஜகங்களை விளக்கிப் பேசினர்.
வந்தவாசி வட்டத்தில் கிராமப் புறங்களில் நுண் நிதி நிறுவனங்களில் பழங்குடி மக்கள் பெயரில் கடன் வாங்கி கொள்ளையடித்த இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டும். நுண் நிதி கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் அநியாய வட்டி கட்டாயப்படுத்தி ஏழை எளிய மக்களிடம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். நுண் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்றவர்களைத் தாக்குவது, ஆபாசமான வார்த்தைகளால் மிரட்டுவது குறித்து புகார் அளித்தால், காவல் துறை வழக்கு பதிந்து கைது செய்திட வேண்டும்.
தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நுண்நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பழங்குடி பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் அரிதாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட குழு உறுப்பினர் யாசர் அராபத், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் அய்யனார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் சேத்துப்பட்டு வட்டார செயலாளர் ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மலை சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா மாவட்ட குழு ஆனந்தன் மவளவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேரடியில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியின் முடிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu