வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு
கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பேசிய நகர மன்ற உறுப்பினர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகரமன்ற தலைவர் ஜலால் (தி.மு.க.) தலைமை தாங்கினார். பொறியாளர் சரவணன், துணைத்தலைவர் சீனிவாசன் (தி.மு.க.) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்ற 19-வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், வந்தவாசி நகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஆணையாளர் மற்றும் மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான வரி விதிப்பு, காலி மனை வரிவிதிப்பு, குடிநீா்க் குழாய் இணைப்பு ஆகியவை வேண்டி பொதுமக்கள் அளித்த 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி புதிய ஆணையரை உடனடியாக நியமிக்கக் கோரி கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
இதையடுத்து திமுக, அதிமுக, பாமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் கூட சரிவர நிறைவேற்றப்படவில்லை என சரமாரி புகார் தெரிவித்து பேசினர்.
இதைத் தொடா்ந்து திமுக, அதிமுக, பாமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நகரமன்ற உறுப்பினர்கள் தீபா செந்தில்குமார், ஷீலா மூவேந்தன், அன்பரசு, பீபிஜான், ஜொகராபீவி சித்திக், நூர்முகமது, க.அஸீனா, நாகூர்மீரான், பர்வீன்பேகம் காஜாஷெரீப், ரிஹானா சையத்அப்துல்கரீம், சரவணகுமார், சந்தோஷ், கிஷோர்குமார், ஜெயபிரகாஷ், ராமஜெயம், அம்பிகா மேகநாதன் ஆகிய 16 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நகர மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu