அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி காயம்
அரசு பள்ளி கழிப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 10 வகுப்பறைகள் உள்ளன.
இதில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 2 கான்கிரீட் கட்டிடங்களில் 5 வகுப்பறைகளும், ஆசிரியர் ஓய்வறை கட்டிடத்தில் ஒரு வகுப்பறையும் இயங்கி வருகிறது. மீதி 4 வகுப்பறைகள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
தற்போது சேதமடைந்துள்ள சிமெண்டு ஓடு வேய்ந்த கட்டிடத்தில் 4 வகுப்பறைகள் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் சிமெண்டு ஓடுகளிலும் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளன. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பள்ளி வளாகத்தில் சேதமடைந்து உபயோகமற்று பூட்டி வைக்கப்பட்டுள்ள மற்றொரு பழைய கட்டிடத்தை இடிக்க அனுமதி அளிக்கப்பட்டும் இதுவரை இடிக்கப்படாமல் உள்ளது. கழிப்பறைக்கு செல்லும் வழியில் இந்த பழைய கட்டிடம் உள்ளதால் ஒவ்வொரு முறையும் மாணவிகள் பயத்துடனே அந்த இடத்தை கடக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று பள்ளி கழிப்பறைக்குச் சென்றபோது, கழிப்பறை மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்ட அந்த மாணவி இன்று சிரமத்துடன் பள்ளிக்கு வந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் பள்ளிக்குச் சென்று மாணவியை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த கழிப்பறையை உடனடியாக பூட்டுமாறும், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யுமாறும் உடன் வந்த தெள்ளார் ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu