வந்தவாசியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. திருமண விழாவிற்கு சென்ற 4 பேர் காயம்...

வந்தவாசியில் திடீரென தீப்பற்றி எரிந்த  பேருந்து.. திருமண விழாவிற்கு சென்ற 4 பேர் காயம்...
X

நடுரோட்டில் தீப்பற்றி எறிந்த பேருந்து.

வந்தவாசியில் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 4 பேர் காயமைடந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டம், பெரியகாயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செங்கோட்டை என்பவரது மகன் வெங்கடேசனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையை சேர்ந்த கோபி மகள் வேதவள்ளிக்கும் அச்சரப்பாக்கத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

இதற்காக, நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் தனியார் பேருந்தில் அச்சரப்பாக்கம் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள மேல்மா கூட்ரோடு அருகே இரவு சுமார் 11 மணியளவில் செல்லும்போது பேருந்தின் டயர் வெடித்து உள்ளது. இதனால் டிரைவர் பேருந்தை சாலை ஓரமாக சாமர்த்தியமாக நிறுத்தி உள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பேருந்தில் திடீரென தீப்பற்றியது. பேருந்து முழுவதும் தீ பரவியது. மேலும், முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்பதால் மூடப்பட்ட கண்ணாடிகளைக் திறந்து பயணிகள் வெளியே இறங்க முடியாமல் தவித்தனர்.

தீ வேகமாக பரவியதால், பேருந்துக்குள் இருந்தவர்கள் அலறியபடி கூச்சலிட்டனர். அப்போது சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்த ஓட்டுநர் உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் இருந்து இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார்.

உடனடியாக, பேருந்துக்குள் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக இறங்கினர். அப்போது பஸ் முழுமையாக திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!