விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 880 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
வந்தவாசியில் உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 880 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மூச்சு உள்ளவரை முயற்சி இருக்க வேண்டும். அந்த முயற்சி தனது சுற்றம் மற்றும் நாட்டை உயர்த்துவதாக இருக்க வேண்டும். விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல. விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம். இந்திய விண்வெளி ஆய்வகத்தில் புதிது புதிதாக செயற்கைகோள்களை உருவாக்கும் ஆராய்ச்சி பணியை விரும்பினேன். கிடைத்ததோ செயற்கைகோள்களின் செயல் இயக்கத்தை கவனிக்கும் பணி. அதையும் விரும்பி செய்து படிப்படியாக உயர்ந்து சந்திரயான் செயற்கைகோளுக்கான திட்ட இயக்குனரானேன். சாதித்தால் மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அயராத உழைப்பையும் உயர்ந்த லட்சியமும் இருந்தால் நிலவுக்கு போவது கனவல்ல நிஜமே. பெண் என்ற காரணத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. எனவே பெரிய கனவுகளுடன், அந்த கனவுகளுக்கு செயல் கொடுக்கும் உறுதிப்பாட்டுடன் பட்டங்களை பெற்றுச் செல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார். .
விழாவில் கல்லூரி செயலர் எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எஸ்.ருக்மணி, தெள்ளார் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் டி.கே.பி.மணி மற்றும் கல்லூரி பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu