கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய இடம் கண்டுபிடிப்பு
தேசூர் அருகே உள்ள ஆச்சமங்கலம் பகுதியை ஒட்டிய இடங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய இடம் கண்டறியப்பட்டது
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம், குணகம்பூண்டி பழனி மற்றும் வெடால் விஜயன் ஆகியோர் இணைந்து தேசூர் அருகே உள்ள ஆச்சமங்கலம் பகுதியை ஒட்டிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது கீழ்நமண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறு குன்று பகுதியை ஆய்வு மேற்கொண்ட பொழுது அதில் சுனை ஒன்றும் அதன் அருகே சிறு சிறு குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அக்குன்றின் சரிவு பகுதியில் மழைநீர் தேங்கும்படியான சுனைகள் பல காணப்படுகின்றன. சுனையைச் சுற்றி ஆங்காங்கே சிறு குழிகள் தென்படுகின்றன. மேலும் அதனை ஆய்வு செய்ததில் கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களைக் கூர்மை அல்லது பட்டை தீட்டிய இடம் எனத் தெரியவந்தது. இக்குழிகள் யாவும் சிறு சிறு தொகுப்புகளாக இக்குன்றின் மீது ஆங்காங்கே காணப்படுகிறது.
கற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களைத் தீட்டி கூர்மை செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதால் , நீர் ஊற்று அல்லது நீர் தேங்கும் மலைப் பகுதிகளை மட்டுமே தேர்வு செய்வர். இக்குன்றில் நீர் தேங்கும்படி செய்து , அந்நீர் அருகே உள்ள சமவெளி பரப்பில் தங்கள் ஆயுதங்களைக் கூர்மை தீட்டும் இடமாக உபயோகித்துள்ளனர்.
இந்த இடத்தில் சிதையாமல் 15 குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பழைய கற்கால மனிதர்கள் உபயோகித்த கருவிகள் யாவும் சொரசொரப்புடன் காட்சி அளிக்கும். புதிய கற்கால மனிதர்கள் அதனைச் சீர்செய்து வழவழப்பு தன்மையுடன் மாற்றி உபயோகிக்கத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் நாடோடியாகவும் வேட்டைச் சமூகமாகவும் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கினர்.
இவ்விடத்தில் காணப்படும் குழிகளை வைத்து புதிய கற்காலத்தில் இப்பகுதியில் ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. என்வே இவையாவும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதலாம். 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இப்பகுதியைத் தமிழக தொல்லியல் துறை முறைப்படி ஆவணம் செய்து இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu