செய்யாறு அருகே போலீஸ் என கூறி எலக்ட்ரீஷியனிடம் பணம் பறித்தவர் கைது

செய்யாறு அருகே போலீஸ் என கூறி எலக்ட்ரீஷியனிடம் பணம் பறித்தவர் கைது
X
செய்யாறு அருகே எலக்ட்ரீஷியனிடம் போலீஸ் என கூறி கஞ்சா சோதனை செய்வதுபோல் நடித்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் என கூறி கஞ்சா சோதனை செய்வதுபோல் நடித்து பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சுண்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கருணா . எலக்ட்ரீஷியனான இவர் இன்று காலை 7 மணியளவில் செய்யாறிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வாகனத்தில் சென்றபோது டிப் டாப் உடை அணிந்த ஒருவர் பைக்கை தடுத்து நிறுத்தினார்.அப்போது நான் செய்யாறு போலீஸ்காரர் என்று கூறிய அவர் கஞ்சா சோதனை செய்து கொண்டிருக்கிறேன். ஏதாவது பாக்கெட்டில் கஞ்சா வைத்திருக்கிறாயா? எனக்கேட்டு சோதனை செய்வது போல் செய்தார்.

அப்போது அந்த நபர் கருணா அணிந்திருந்த கவரிங் நகையை அறுத்துக் கொண்டதோடு பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 300-ஐ பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வாகனத்தில் தப்பினார்.

இது குறித்து கருணா கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர் முருகன் என்பதும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை மிரட்டல்

வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் . விவசாயி. இவரது விவசாய நிலத்துக்கு செல்லும் பொதுவழியை சிலர் ஆக்கிரமித்துள்ளனராம். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் கூத்தம்பட்டு கூட்டுச்சாலையில் உள்ள செல்போன் டவரில் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தினார்.

தகவலறிந்த தாசில்தார் பொன்னுசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சீனுவாசன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், பொன்னூர் காவல் நிலைய போலீஸார், வந்தவாசி தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் அவரை கீழிறங்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் இறங்குவேன் என்று ராஜாராம் கூறி கீழிறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரமாக போராட்டம் மேற்கொண்ட ராஜாராம் போராட்டத்தை கைவிட்டு டவரிலிருந்து கீழிறங்கினார். பின்னர் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!