வந்தவாசி நகர் மன்ற கூட்டத்தில் உறுப்பினா் நடத்திய தர்ணா போராட்டம்
நகர மன்ற தலைவர் ஜலால் தலைமையில் நடைபெற்ற வந்தவாசி நகர மன்ற கூட்டம்.
வந்தவாசி நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம், அதன் தலைவா் எச்.ஜலால் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் வசந்தி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் பேசும்போது முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தீர்மானம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கான தீர்மானங்களை கொண்டு வந்தார் . தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்களை தந்த முதல்வரை வாழ்த்தி பேசிய அவர், அதே மருத்துவமனை அருகே நிறுவப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு சரிவர எறிவதில்லை என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசுகையில், நகரத்தில் அச்சமூட்டும் வகையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி வளாகத்தில் கட்டி வைத்தனர் . ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் நகராட்சி ஊழியர்களை தாக்கி மாடுகளை அவிழ்த்து சென்றுள்ளனர். இதற்கு நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
தா்ணாவில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்
கூட்டத்தில், 23-ஆவது வாா்டு பாமக நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் பேசுகையில், வந்தவாசியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் சரிவர இயங்கவில்லை. அரசு, தனியாா் பேருந்துகள் சரிவர வந்து செல்வதில்லை. பேருந்து நிலையத்தினுள் உள்ள மின்விளக்குகளும் எரிவதில்லை. இதனால் பேருந்து நிலையம் இருண்டு காணப்படுகிறது. மேலும், சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் சரிவர இயங்காததை கண்டித்து, அவா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, நுழைவு வாயில் முன் படுத்து தா்னா நடத்தினாா். இதனால் கூட்டம் முடிந்தும் நகா்மன்ற கூடத்திலிருந்து வெளியே வர முடியாமல் உறுப்பினா்கள் தவித்தனா்.
இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் வசந்தி உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் போராட்டத்தை கைவிட்டாா். இக்கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu