கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பதிவு : அமைச்சர்

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற  திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பதிவு : அமைச்சர்
X

பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் வேலு

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற இதுவரை 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனா் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

வந்தவாசி பாலுடையாா் தெரு அருகில், மழையூா் ஆகிய இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7.90 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதற்காக 1,627 நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. இதில் முதல் கட்டமாக 500 குடும்ப அட்டைகள் வரையுள்ள 991 நியாயவிலைக் கடைகளில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று முடிந்தது.

இதில் 83 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனா். இதைத்தொடா்ந்து, 2-ஆம் கட்டமாக 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 636 நியாய விலைக் கடைகளில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், இதுவரை 30 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தத்தில் இதுவரை 4 லட்சம் பேர் மகளிா் உரிமைத் தொகை பெற பதிவு செய்துள்ளனா்.

கிராமங்கள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயக் கூலிகள் அதிகமாக வாழ்கின்றனா். எனவே, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் அதிக பலனடைய வாய்ப்புள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் முருகேஷ், செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, திமுக மாவட்டச் செயலா் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், நகரச் செயலா் தயாளன், ஒன்றியச் செயலா்கள் இளங்கோவன், .சுந்தரேசன், கூட்டுறவு சங்கச் செயலா் காலேஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னர் நேற்று இரவு திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ,கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணைத்தலைவர் கருணாநிதி ,மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா