பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கும் பணி நாளை தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. மேலும் முறைகேடுகள் இருந்தால் புகார் தெரிவிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 20 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் அனைவரும் அந்தந்த நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்படும்.
இதற்காக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு, முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 31-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.
முற்பகலில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வழங்கப்படும்.
நடைமுறையில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு வருகிற வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175-233063-க்கும் அல்லது தாலுகா அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரின் செல்போன் எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம்.
தாலுகா அளவில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை- உதவி கலெக்டர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர்- திருவண்ணாமலை துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஆரோக்கியராஜ், போளூர்- கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், ஆரணி- உதவி கலெக்டர் கவிதா, கலசபாக்கம்- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தண்டராம்பட்டு- திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், செங்கம்- மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பார்த்திபன், ஜமுனாமரத்தூர்- பழங்குடியினர் நல திட்ட அலுவலர் இளங்கோ, செய்யாறு- உதவி கலெக்டர் விஜயராஜ், வந்தவாசி- செய்யாறு சர்க்கிள் துணை பதிவாளர் (கூட்டுறவுத் துறை) கமலக்கண்ணன், வெம்பாக்கம்- செய்யாறு சிப்காட் விரிவாக்கம் தனித்துறை கலெக்டர் (நில எடுப்பு) நாராயணன், சேத்துப்பட்டு- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதாலட்சுமி. என தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu