உங்கள் தமிழ் பற்று வெறும் அரசியல் சார்ந்தது தான்: ஆளுநர் தமிழிசை பேச்சு
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
திருவண்ணாமலை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மாணவ-மாணவிகளுக்கான வாழ்வில் முன்னேற்றம் குறித்த ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. அதில் 800 உறுப்பினர்கள் அமரலாம். நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் பெருமைபட்டாலும், தமிழர்கள் அனைவரும் பெருமைபட கூடிய நிகழ்வு உள்ளது. திருவள்ளுவர் எடுத்து கூறிய நல்லாட்சியின் அடையாளமாக, தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், செங்கோல் குறித்து அரசியலாக்கப்பட்டுள்ளது.
செங்கோல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நிச்சயமாக அது இங்கிருந்து ஆதீனங்கள் கொண்டு சென்று ஆட்சி மாற்றத்திற்காக வழங்கியுள்ளனர். ஆனால் அதை எங்கேயோ போட்டுள்ளனர். அதை எடுத்து தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அங்கு வைக்க உள்ளனர். இது காலம் காலமாக கட்டடம் இருக்கும் வரை செங்கோலும் இருக்கும். அங்கு தமிழரின் பெருமையும் இருக்கும். தமிழர்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பெருமைப்பட வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக தனது முதல் நன்றி கடிதத்தை பிரதமருக்கு எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் வேறு எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் தமிழ்நாட்டு செங்கோலுக்கு கிடைத்துள்ளது. எத்தனை கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழுக்கு என்று பெருமை வரும் போது நீங்கள் அதை அங்கீகரித்திருந்தால் உண்மையில் நீங்கள் தமிழ் பற்றாளர்கள். இல்லை என்றால் உங்கள் தமிழ் பற்றும், அரசியல் சார்ந்தது தான்.
குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது குறித்து பலர் பேசுகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்தால்தான் நன்றாக இருக்கும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். பிரதமர் திறக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு, குடியரசு தலைவருக்கு வெறும் அழைப்பு மட்டும் கொடுக்கமாட்டார்கள். குடியரசு தலைவரின் வாழ்த்துடன் கட்டடம் திறக்கப்படுகிறது.
குடியரசு தலைவர் மீது அக்கறை கொண்டவர்கள், குடியரசு தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது வாக்களிக்காதவர்கள். ஒரு பழங்குடியின தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு வரவில்லை. ஆனால் இன்று அவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இன்று போராட்டம் நடத்துபவர்கள், அவர் குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கும் போது பழங்குடியினர் என்று தெரியவில்லையா?. இத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் பழங்குடியினர் என்பதன் அடிப்படையிலாவது வாக்களித்தீர்களா?.
அவரை பிரதமர் தேர்ந்தெடுத்து ஆதரவு கொடுத்து, பலர் அவரை வரவேற்று வாக்களித்துள்ளனர். அவர்களை போன்று வாக்களித்தவர்களால் தான் அவர் குடியரசு தலைவராக ஆகி உள்ளார். நீங்கள் வாக்களிக்காதவர்கள். எனவே உங்களுக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் சில செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருவதை குறித்து எழுப்பிய கேள்விக்கு நான் ஆக்கபூர்வமாக பேச வந்துள்ளேன் தாக்கபூர்வமாக பேச வரவில்லை இது பற்றி தமிழக அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் என பதில் அளித்தார்.
முன்னதாக, திருவண்ணாமலைக்கு வந்த அவரை, ஆட்சியர் .முருகேஷ் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu