வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்றத் தேர்தல் 2024 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற ஜூன் மாதம் நான்காம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணபட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளின் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மாவட்ட கலெக்டர் கூறினார் அப்போது அவர் கூறுகையில்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும் தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அதன் விவரம் உடனடியாக ஊடக அறைக்கு தெரிவிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்கு எண்ணிக்கை விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடக்கூடாது. செல்போன், லேப்டாப், ipad , போன்ற மின்னணு உபகரணங்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கைப்பிடியுடன் உள்ள கேமரா வாக்கு எண்ணும் அறைக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதிக்கும் எல்லைக்கோடு வரை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.
எனினும் இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு விவரங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை. இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட ஊடலர்கள் வாக்கு எண்ணும் தினமான நான்காம் தேதி காலை 7 மணிக்கு முன்னதாக வருகை புரிய வேண்டும்.
மேலும் அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படின் திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தொடர்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாக கட்டிடங்கள் ஆகும். ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடங்கள் ஆகும்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேசைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
நியமனம் செய்யப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களின் தற்போதைய வண்ணப் புகைப்படம் இரண்டு நகல்களுடன் படிவம் 18 சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரின் அலுவலகத்தில் வருகின்ற 31 ம் தேதிக்குள் வழங்கி உரிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணும் தினமான நான்காம் தேதி காலை 7 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டும்.
முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டுவர அனுமதி இல்லை. மேலும் வேட்பாளர்களும் தங்களது கட்சி முகவர்களுக்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் எவற்றையும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மேற்படி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேசையை விட்டு அடுத்த மேசையை பார்வையிட செல்லக்கூடாது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போது மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சான்றிதழை வேட்பாளர் பெரும்போது வேட்பாளருடன் நான்கு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
இப்பணியில் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கை முடித்து தருவதற்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தகுந்த ஒத்துழைப்பினை தர வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu