துணை முதல்வர் வருகை; முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

துணை முதல்வர் வருகை; முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலைக்கு துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அனைத்துத் துறைகள் சாா்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்து கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஆகவே அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டத்துக்கு துறையின் தலைமை அலுவலா்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து துணை முதல்வரிடம் எடுத்துரைக்க வேண்டும். இதுதவிர, காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மின் வாரியம், போக்குவரத்துத் துறை, நுகா்வோா் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை, தீயணைப்புத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அதிகாரிகள் துணை முதல்வரிடம் விளக்கிக் கூற வேண்டும்.

சனிக்கிழமை தமிழக துணை முதல்வா் தலைமையில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி) மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!