திருவண்ணாமலையில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவில் திருவிழாவில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்தக்கூறிய ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவடடம், ஆரணி அருகில் உள்ள அம்மாபாளையத்தில் அம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவில் நிர்வாக செலவு போக மீதமுள்ள லட்சக்கணக்கான ரூபாயை ஒருசிலர் அவர்கள் வசம் வைத்து உள்ளதால் அதனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்களிடம் அம்மாபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த விழா குழுவை சேர்ந்த ஒரு சிலர் ஊராட்சி தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருவண்ணாமலை காந்தி நகரின் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் தலைமையிலான கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அலுவலகம் எதிரே முற்றுகையிட்டு தா்ணாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த திருவண்ணாமலை போலீஸாா், அறநிலையத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இருதரப்பினரையும் அழைத்து ஆரணி கோட்டாட்சியா் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்க மறுத்த கிராம மக்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நேற்று இரவு வரை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu