விஜயகாந்த் மறைவு: பல்வேறு அமைப்பினா் மரியாதை
மறைந்த விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திருவண்ணாமலை பாஜகவினர்
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் இவரது இறப்பு என்பது தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரிடியாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி,திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், திருவண்ணாமலை, காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வினோத் கண்ணா, குமரராஜா, மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் இறை.மாணிக்கம், அகிலா சூரி, மாவட்டச் செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, விஜய், நகர நிா்வாகிகள் குரு, ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தேவிகாபுரம்
மறைந்த தேமுதிக நிறுவனர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திரைப்பட நடிகர் விஜயகாந்த் மறைந்ததை ஒட்டி தேவிகாபுரம் பஜார் வீதியில் அதிமுக ஊராட்சி கழகத்தின் சார்பாக விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கவுன்சிலர், அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயசங்கர மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜவ்வாது மலை
ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய குழு கவுன்சிலர் கவிதா மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில் உள்ள தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில், சமூக சேவகர் மணிமாறன் தலைமையில் கேப்டன் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, கண்ணீர் மல்க ஒப்பாரி பாடல்களைப் பாடியும், சிவபுராணங்கள் பாடியும் தொழு நோயாளிகள் அனைவரும்;அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu