வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாததால் இப்படியும் ஒரு மலை கிராமம்
கர்ப்பிணிப் பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்
வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 7 கி.மீ. தூரம் டோலி கட்டி பொதுமக்கள் தூக்கி சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலையை சேர்ந்தவர் ராஜாகிளி, விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அந்த மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டும், டார்ச் லைட் பிடித்தும் டோலி கட்டி கர்ப்பிணியை அமர வைத்து மலையிலிருந்து கீழே உள்ள தார்சாலை வரை தூக்கி வந்தனர்.
பின்னர் அங்கிருந்து அருகே உள்ள வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அந்த கர்ப்பிணி பெண்ணை சேர்த்துள்ளனர். அங்கு சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் கிராம மக்கள் தொடர்ந்து சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்
நெக்னாமலை கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் இங்கு குடும்பமாக வசித்து வருகின்றோம். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் இன்று வரை சாலை வசதி செய்து தரப்படவில்லை.
முன்பு வேலூர் மாவட்டத்தில் இருந்த போதும் மனு அளித்துள்ளோம்.
தற்போது வாணியம்பாடி பகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளதால் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தினர் இடமும் மனு அளித்துள்ளோம்.
இன்று வரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை கிராமம் மக்கள் ஒன்றிணைந்து தற்காலிக மண்சாலையை நாங்கள் அமைத்துள்ளோம். சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் தற்போது இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தற்போது டோலி கட்டி தூக்கி சென்றோம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu