திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த ஆன்மீக பெருமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், தீபம் போன்ற நாட்களில் நகரின் புறநகர் பகுதிகளில் கார் பார்க்கிங் வசதியை ஏற்பாடு செய்வது போன்று வார இறுதி நாட்களிலும் கார் பார்க்கிங் வசதியை வெளியில் செய்ய வேண்டும். மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தனியார் இடங்களை கோவில் நிர்வாகம் வாங்கி நிரந்தர பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். பே கோபுர தெரு, பச்சையம்மன் கோவில் தெரு பகுதிகளை ஏற்கனவே உள்ள பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்தால் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக சென்றால் சின்னக்கடை வீதி போன்ற பகுதிகளின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், திருவண்ணாமலை நகரில் இயங்கக்கூடிய ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த வேண்டும். பகல் நேரங்களில் பார்சல் சர்வீஸ் வாகனங்களை இறக்க அனுமதிக்க கூடாது. கோவில் உள்ளே பக்தர்கள் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மதிமுக சார்பில் பாசறை பாபு கலந்து கொண்டு பேசுகையில், பேருந்துகள் அனைத்தும் நகரப் பகுதியில் இயக்காமல் பழைய பைபாஸ் சாலை, திருவள்ளுவர் சிலை ,கல் நகர் வழியாக இயக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் வெற்றிச்செல்வன் பேசுகையில், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்த வேண்டும். அண்ணாமலையார் கோவிலுக்கு பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
எஸ் கே பி கருணாநிதி பேசுகையில், திருவண்ணாமலை நகர் மற்றும் கிரிவலப் பாதையில் போக்குவரத்து போலீசார் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், பார்சல் சர்வீஸ் வாகனங்களில் டோர் டெலிவரி முறையை ரத்து செய்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் பேசுகையில் திருவண்ணாமலை நகரில் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலு, பேசுகையில்
கடந்த 10 தினங்களாக தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தேன். திருவண்ணாமலையை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலை பொதுமக்கள் சமூக ஊடகங்கள் என பல்வேறு தரப்பினரும் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மேல்மருவத்தூர் பக்தர்கள் என நகரப் பகுதியில் உள்ள மக்களின் சிரமத்தை எனக்கு அனுப்பியதால் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு திருவண்ணாமலை நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரி செய்ய இது போன்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும், நான் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை போன்று ஒன்பது சாலைகள் வேறு எந்த நகரிலும் இல்லை என்றும், இங்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை இந்த சாலைகளின் வழியாகவே சரி செய்யலாம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை நகரை சேர்ந்த 15 நபர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த மூன்று கூட்டங்களை நடத்தி அந்த குழுக்கள் மூலமாக முறையான நகரப் பகுதிகளை ஆய்வு செய்து அவர்கள் அளிக்கக்கூடிய அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலையில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர், திருவண்ணாமலை வருவாய் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வியாபார சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu