குற்ற சம்பவங்கள் தடுக்க பேஸ்டிராக்கர் செயலியை பயன்படுத்த ஏற்பாடுகள்
சரக டி.ஜ.ஜி. ஆனிவிஜயா , கோவிலில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட எஸ்பி பவன்குமார்
கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதால் 15 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பாா்க்கப்படுகிறது.
அதன்படி நேற்று மாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இன்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது சிரமம் என்பதால் நேற்றே பெரும்பாலானோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சிலர் நேற்று இரவில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். கிரிவலப்பாதையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்த்திகை தீபத் திருவிழாவை போன்று அருணாசலேஸ்வரர் கோவில் போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஜ.ஜி. ஆனிவிஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கோவிலில் கண்காணிப்பு கட்டுபாட்டு அறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர்கூறுகையில், சித்ரா பௌர்ணமியையொட்டி 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து அனைத்து பஸ் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டறிய பேஸ்டிராக்கர் என்ற செயலியை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 40 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் இருக்கும். பொதுமக்களுக்கு தேவையான முதலுதவிகளை அளிக்க தனியாக குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் நகர்ப் பகுதி மற்றும் கோவில் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதை முழுவதும் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி 30 பேர் கொண்ட உளவுத்துறை குழுக்கள் நகர் பகுதி மற்றும் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் உள்ள தொலைபேசியில் பேஸ்டிராக்கர் செயலி பொருத்தப்பட்டு குற்றவாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெறும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu